/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதலாக வேலை தர வேண்டும்: கிராம சபையில் கோரிக்கை
/
கூடுதலாக வேலை தர வேண்டும்: கிராம சபையில் கோரிக்கை
ADDED : அக் 07, 2024 12:43 AM
அன்னுார் : கூடுதல் நாட்கள் வேலை தர சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2023 ஏப். 1 முதல், 2024 மார்ச் முடிய, நடைபெற்ற பணிகள், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில், 2016-- 17 முதல் 2021-- 22 வரை கட்டப்பட்ட வீடுகள் குறித்து சமூக தணிக்கை செய்யும் பணி செப். 2ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம், அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் கரியாம்பாளையம் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், கடந்த 30ம் தேதி சமூக தணிக்கை துவங்கியது.
தணிக்கையாளர்கள், திட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, பணிகளை அளவீடு செய்தனர். தொழிலாளர்களின் வேலை அட்டையை பரிசோதித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் கரியாம்பாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் தனபால் தலைமை வகித்தார்.
வட்டார வள அலுவலர் கனகராஜ் தணிக்கை அறிக்கை வாசித்து பேசுகையில், ''பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட ஒன்பது வீடுகளை ஆய்வு செய்ததில், நான்கு ஆட்சேபனைகள் கண்டறியப்பட்டன. 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்ற பணிகளில், கூடுதல் தொகை உள்ளிட்ட நான்கு ஆட்சேபனைகள் கண்டறியப்பட்டன. கடந்த நிதியாண்டில், 23 பணிகள், 47 லட்சம் ரூபாயில் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
தொழிலாளர்கள் பேசுகையில், 'மாதம் ஒரு வாரம் மட்டுமே வேலை தருகின்றனர்.
கூடுதலாக வேலை தர வேண்டும். ஒரே மாதத்தில் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வேலை தர வேண்டும்.
குறைந்தது 100 நாட்கள் வேலை தர வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்தனர்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், ஊராட்சி செயலர் கோகிலா, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.