/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜி.டி.நாயுடுவுக்கு சிலை அமைக்க தீர்மானம்
/
ஜி.டி.நாயுடுவுக்கு சிலை அமைக்க தீர்மானம்
ADDED : பிப் 13, 2025 11:59 PM
கோவை; கோவை வ.உ.சி., மைதானத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு முழு உருவச்சிலை வைக்க இடம் ஒதுக்கப்பட்டு, மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவையை சேர்ந்த ஜி.டி.நாயுடு; விஞ்ஞானி. 'இந்தியாவின் எடிசன்' என, பெருமையாக அழைக்கப்படுபவர். இவரது கண்டுபிடிப்புகளை இளம் தலைமுறை அறியும் வகையில், 'மியூசியம்' அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த கல்வியாளருமான ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் சிலை அமைக்கப்படும் என, தமிழக சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிலை வைக்க, செய்தி - மக்கள் தொடர்பு துறை மூலமாக இடம் தேடப்பட்டது.
அதில், தடை செய்யப்பட்டுள்ள பொது சாலைகள், நடைபாதை, அரசு நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் சிலைகள் வரவில்லை என்பதை கலெக்டரும், காவல்துறை கண்காணிப்பாளரும் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதனால், வ.உ.சி., மைதானத்தில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வ.உ.சி., சிலைக்கு அருகே, 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடத்தில், ஜி.டி.நாயுடுவுக்கு முழு உருவச்சிலை அமைப்பதற்கு ஒதுக்கிக் கொடுப்பதென, கோவை மாநகராட்சியில் நேற்று நடந்த நகரமைப்பு மற்றும் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை குழு தலைவர் சந்தோஷ் பாபு, முன்மொழிந்தார். கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், கார்த்திகேயன், அம்பிகா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, கலெக்டருக்கு கருத்துரு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
அடுத்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர்கள் மகேந்திரன், சத்யா, கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.

