ADDED : ஜூன் 10, 2026 06:19 AM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளை யம், மாதம்பட்டி, மத்வராயபுரம், வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரைபோளுவாம்பட்டி, தேவராயபுரம், தென்னமநல்லூர் ஆகிய 10 ஊராட்சிகளில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க, கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இதுவரை, ஊராட்சிகளில், தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் போது, பொதுமக்கள் வீட்டில் உள்ள கழிவை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, இரண்டாக பிரித்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இனி வீட்டில் உள்ள கழிவுகளை, சமையலறையில் உள்ள கழிவுகளை ஈரக்கழிவு எனவும்; காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றை உலர்கழிவு எனவும்; டயப்பர், நாப்கின் போன்றவற்றை சுகாதாரக் கழிவு எனவும்; பேட்டரி, காலாவதியான மருந்துகள், பல்ப் போன்றவை சிறப்பு கவன கழிவு எனவும், நான்காக கழிவுகளை பிரித்து தர வேண்டும்.
தெருக்களில் குப்பை கொட்டக் கூடாது, குப்பையை தீ வைத்து எரிக்க கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின், தெரு விளக்கு, பொதுக்கழிப்பிட வசதி அமைத்து தரவேண்டும் என, பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
