கேரளத்தில் 'ஷிகெல்லா' தொற்று; தண்ணீர் தரம் பரிசோதிக்க உத்தரவு
கேரளத்தில் 'ஷிகெல்லா' தொற்று; தண்ணீர் தரம் பரிசோதிக்க உத்தரவு
ADDED : ஜூன் 10, 2026 06:19 AM

கோவை: 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளத்தில் நான்கு வயது சிறுமி ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் உயிரிழந்தார். மேலும் இரு பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அப்பள்ளியின் 25 மாணவர்களுக்கு, தொற்று அறிகுறி இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று தண்ணீர் மூலம் பரவுவதால், கோவையில் குடிநீரின் தரத்தை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுவோர் குடியிருப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,'' மழைக்காலம் துவங்கியுள்ளதால், தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தண்ணீரில் குளோரின் அளவு (0.2 பி.பி.எம்.,) சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சிக்கு 1,200 பேரும், ஒரு டவுன் பஞ்சாயத்துக்கு 10 பேர் வீதம் களப்பணியாளர்கள் மூலம், தண்ணீர் தரம் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் அதிகமுள்ள பகுதிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுபோக்கு சிகிச்சைக்கு வருவோர் குறித்த விபரங்கள் பெற்று, அங்கு சுகாதார பணி மேற்கொள்ளப்படும். கோவையில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்புக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை,'' என்றார்.
