/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய்த்துறை அலுவலக பணிகள் பாதிப்பு
/
வருவாய்த்துறை அலுவலக பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 25, 2025 11:14 PM

கோவை; தமிழக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், கோவை மாவட்டத்தில் நேற்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனால், வி.ஏ.ஓ., அலுவலகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை, வருவாய்த்துறை பணிகள் நடைபெறவில்லை.
வருவாய்த்துறையினரின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் வகையில், 'பணி பாதுகாப்பு சட்டம்' இயற்ற வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நெருக்கடி ஏற்படுத்துவது; கள பணியாளர்களுக்கு அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும், பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் மீண்டும் பணி நியமனம் வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் வெளிமுகமை, தற்காலிக, தொகுப்பூதிய பணியிடங்களை கைவிட வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் நிரந்தர ஊழியர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட அளவில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க நிர்வாகிகள் சையத் உசேன், ஜோதி பிரகாஷ், குமார், நிமலன் கிறிஸ்டோபர், சரவணக்குமார் உள்ளிட்டோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
1,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் பங்கேற்றனர். வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்களில், அனைத்து பிரிவு பணிகளும் பாதிக்கப்பட்டன.