/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை நீர் பாதை அமைக்க வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு
/
மழை நீர் பாதை அமைக்க வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 22, 2025 11:24 PM
அன்னுார், ; அன்னுார் பேரூராட்சியில் மழை நீர் செல்லும் பாதையில் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அன்னுார் பேரூராட்சியில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அன்னுாரில் மேட்டுப்பாளையம் சாலையில், 119 ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. குளத்திலிருந்து மழை நீர் கிழக்கே செல்கிறது. மழை பெய்யும் காலங்களில், அன்னுாரில் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து அதிக அளவில் மழை நீர் தர்மர் கோவில் வீதி, இட்டேரி வீதி வழியாக செல்கிறது.கடந்த 2023 டிசம்பரில் பெய்த மழையால் தர்மர் கோவில் வீதி, புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதியில் நீர் தேங்கியுள்ளது.
விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சத்தி ரோடு, அவிநாசி ரோட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இட்டேரி வீதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதற்கு தீர்வு காண, மழைநீர் செல்லும் பாதை அமைக்க, கழிவுநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அன்னுார் தாசில்தார் குமரி ஆனந்தன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் கார்த்திகேயன், வருவாய் துறை அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் சத்தி ரோடு மற்றும் இட்டேரி வீதியில் ஆய்வு செய்தனர்.
மழை நீர் மற்றும் கழிவுநீர் எங்கு தேங்குகிறது. எந்த திசையில் சரிவு உள்ளது. நீர் செல்வதற்கு எவ்வளவு அகலம் பாதை தேவைப்படும் என்பதை களத்தில் ஆய்வு செய்தனர்.
இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ மற்றும் தோட்டங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

