/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைமலையில் நடப்பாண்டு துவக்கம் நெல் கொள்முதல்!விலை உயராததால் விவசாயிகள் கவலை
/
ஆனைமலையில் நடப்பாண்டு துவக்கம் நெல் கொள்முதல்!விலை உயராததால் விவசாயிகள் கவலை
ஆனைமலையில் நடப்பாண்டு துவக்கம் நெல் கொள்முதல்!விலை உயராததால் விவசாயிகள் கவலை
ஆனைமலையில் நடப்பாண்டு துவக்கம் நெல் கொள்முதல்!விலை உயராததால் விவசாயிகள் கவலை
ADDED : மார் 15, 2024 10:30 PM

ஆனைமலை;ஆனைமலையில், நடப்பாண்டுக்கான நெல் கொள்முதல் மையம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. ஆனால், நெல் கொள்முதல் விலையை உயர்த்தாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆனைமலை அருகே, ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன.பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், பெரும்பாலும்நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் இரு போக சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்தாண்டு, பருவமழை பொய்த்தது, அணைகளின் நீர்மட்டம் சரிவு காரணமாக, ஒரு போகம் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டது.
இரண்டாம் போகத்துக்கு நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் போராட்டம் நடத்திய சூழலிலும், அணை நீர்மட்டம் குறைவாக இருப்பதால் நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் அணையில் இருந்து இரண்டு கட்டமாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், குளப்பத்துக்குளம் மற்றும் பழைய ஆயக்கட்டு கால்வாய் பகுதியில் குறைந்தளவு மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டது.
சாகுபடி செய்யப்பட்ட நெல் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இடைத்தரகர்கள் தலையீடு தவிர்த்து, அரசு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய, நெல் கொள்முதல் மையம் துவங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, அரசு உத்தரவின் பேரில்ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நெல் கொள்முதல் மையம் நேற்று திறக்கப்பட்டது.நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனிக்குமார், கோவை தரக்கட்டுப்பாட்டு அதிகாரி வனிதா மற்றும் விவசாயி பட்டீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து, நெல் கொள்முதல் மையம் துவங்கப்பட்டுள்ளது. சன்னரகம் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ), 2,310 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொது ரகம் ஒரு குவிண்டால், 2,265 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரையும், மாலை, 2:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
குறைந்தது பரப்பு
விவசாயிகள் கூறுகையில், 'ஆனைமலையில் பருவமழை பொய்த்தது; ஆழியாறு அணையில் நீர்மட்டம் குறைவு போன்ற காரணங்களால், இந்தாண்டு நெல் சாகுபடி குறைந்துள்ளது. குளப்பத்துக்குளம் மற்றும் பழைய ஆயக்கட்டுபகுதி என மொத்தம், 400 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்தாண்டே கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டும் அதே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரப்பளவு குறைந்துள்ள நிலையில் விலையும் குறைவாக இருப்பது வேதனையாக உள்ளது. சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.

