/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குதிரையில் பயணிப்பதே அன்று தனி கெத்துதான்!
/
குதிரையில் பயணிப்பதே அன்று தனி கெத்துதான்!
ADDED : மே 04, 2025 12:44 AM

கோவையில், ஆட்டோக்களின் இயக்கம் துவங்கும் முன், குதிரை வண்டிகள் நகரை வலம் வந்ததை யாராலும் மறக்க முடியாது. இன்று ஓரிருவர் மட்டுமே குதிரைகளை வைத்து பராமரிக்கின்றனர்.
கோவையில் நான்கு இடங்களில், குதிரை வண்டி நிலையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது உக்கடம் பைபாஸ் மற்றும் சிங்காநல்லுாரில் மட்டுமே உள்ளன. கோவை உக்கடம் பைபாஸ் பகுதியில், நலிவடைந்து வரும் குதிரை வண்டிகளை, இன்றும் பாரம்பரியம் மாறாமல், பராமரித்து வருகிறார், அலாவுதீன் பாஷா.
அவர் கூறியதாவது:
அன்றெல்லாம் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும், குதிரை வண்டிகளில் செல்வது அனைவருக்கும் பிடித்த, கவுரவமான ஒன்றாக பார்க்கப்பட்டது. குதித்து, குதித்து அதில் பயணிப்பதே தனி கெத்துதான். இன்று காது குத்து, திருமண வரவேற்பு, 60ம் கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வ.உ.சி., பூங்காவில் குழந்தைகளுக்கு சவாரி செய்ய பயன்படுத்துவோம். பந்தயக் குதிரையாக இருந்தால், நாள் ஒன்றுக்கு, ரூ.700 முதல் ரூ.800 வரை பராமரிப்புக்கு செலவாகிறது.
சத்தான ஆகாரம் கொடுத்தால் மட்டுமே அவை நன்றாக வளரும். பாதாம் பிசின், முந்திரி உட்பட உணவுகளை வழங்க வேண்டும். அதேபோல் தினமும் அவற்றுக்கு பயிற்சியும் முக்கியம்.
நாட்டுக் குதிரைகள் அதிக துாரம் செல்ல பயன்படும். இவை, 10 - 20 கி.மீ., வரை நிற்காமல் செல்லும்.
நாட்டுக் குதிரைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கொடுத்தால், ஒரே இரவில், 100 கி.மீ., வரை செல்லும். இன்று ரேக்ளா ரேஸ்களுக்கு மட்டுமே குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.