/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழ்வியல் நடைமுறையை வகுத்தவர்கள் ரிஷிகள்'
/
'வாழ்வியல் நடைமுறையை வகுத்தவர்கள் ரிஷிகள்'
ADDED : பிப் 16, 2024 02:02 AM

கோவை;சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் துறவறம் பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து பொன்விழா ஆண்டை சங்கர விஜய திருவிழாவாக கோவையில் கொண்டாடப்பட்டது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த இரண்டாம் நாள் நிகழ்வில் கர்நாடக மாநில அரசு முன்னாள் கூடுதல் தலைமை செயலாளர் ராமசுவாமி பேசியதாவது:
நம்நாடு பண்பாடு, கலாசாரம் மிக்கது. சனாதன தர்மம், சமத்துவம் ஆகியவற்றால் நம் நாட்டைகாத்து, அத்வைதம் மூலம், வாழ்வியல் முறைகளை தந்தவர் முனிவர்களும், யோகிகளும், இவர்கள் சொற்களில் ஏற்படும் அதிர்வுகள் வாயிலாக தத்துவங்களை தந்தவர்கள்.
அத்வைதத்தை போதித்த ஆதிசங்கரர் ஞானம் பெற காலடியிலிருந்து நர்மதை நதி வரை சென்றார். நம் நாட்டின் கலாசாரம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்று தான். பேசும் மொழிகளில் வித்தியாசம் இருந்தாலும், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒன்று தான்.
குருகுலம் தந்த கல்வியை ஒழித்தால் தான், கால் பதிக்க முடியும் என்று ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு நமது மொழியை, பண்பாட்டை சீர்குலைத்தார்கள். ஆனால் நமக்கு நல்லதொரு வாழ்வியல் நடை முறையை நமது ரிஷிகள் கொடுத்தனர் அதையும் வேத சாரத்தையும் நாம் வழிவழியாக பின்பற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக முன்னாள் டி.ஜி.பி.,ராமகிருஷ்ணன் பேசுகையில், ''மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், குருவின் ஸ்தானம் மிக முக்கியம். குரு என்பவர் மனதில் உள்ள இருட்டை நீக்குபவர்.
1,000 சூரியன், சந்திரன் ஒரே நேரத்தில் வந்தாலும், வெளி இருட்டைத்தான் போக்க முடியும். மனஇருட்டை நீக்க குரு அவசியம். அதனால் ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, அடுத்த நிலைக்கு மாணவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுளை சிருங்கேரி சங்கர மடம், கோவை தர்ம அதிகாரி விஜய் ஆனந்த் குழுவினர், ஸ்ரீ வித்யாதீர்த்த பவுண்டேஷன் ஆகியவை செய்திருந்தது.