/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆற்றுக்கு செல்ல படித்துறை அமைப்பு; மடத்துக்குளத்தில் பணி தீவிரம்
/
ஆற்றுக்கு செல்ல படித்துறை அமைப்பு; மடத்துக்குளத்தில் பணி தீவிரம்
ஆற்றுக்கு செல்ல படித்துறை அமைப்பு; மடத்துக்குளத்தில் பணி தீவிரம்
ஆற்றுக்கு செல்ல படித்துறை அமைப்பு; மடத்துக்குளத்தில் பணி தீவிரம்
ADDED : அக் 02, 2025 12:02 AM
மடத்துக்குளம்; அமராவதி ஆற்றில், மடத்துக்குளம் அருகே படித்துறை கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது; பிற பகுதிகளிலும் படித்துறையை மேம்படுத்த சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை அமராவதி அணையிலிருந்து துவங்கும் அமராவதி ஆற்றின் கரையில், பழமையான கோவில்களும், நுாற்றுக்கணக்கான கிராமங்களும் அமைந்துள்ளன.
கிராம மக்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும், அமராவதி ஆற்றுக்கு சென்று வர முன்பு படித்துறைகள் அமைத்து பராமரித்து வந்தனர்.
மடத்துக்குளத்தில் படித்துறை இல்லாத நிலையில், தேசிய நெடுஞ்சாலை பாலத்தை ஒட்டி, திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதிக்கு, 2 கி.மீ., துாரம் வரை நடந்து சென்று, ஆற்றுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இந்த பாதையில், சரிவான வழித்தடத்தில், ஆபத்தான முறையில், புதர் மண்டியும், பாறைகள் அதிகமுள்ள பகுதியில், அப்பகுதி மக்கள் ஆற்றுக்கு சென்று வந்தனர்.
மடத்துக்குளத்தில், படித்துறை அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில்,
தற்போது, 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், படித்துறையும், குறிப்பிட்ட துாரத்துக்கு பாதையும் மேம்படுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் எளிதாக ஆற்றுக்கு சென்று வர முடியும்.
அதே வேளையில், பழமையான கடத்துார் அர்ச்சுனேஸ்வரர், குமரலிங்கம் காசி விஸ்வநாதர், கொழுமம் தாண்டேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களின் அருகில், அமராவதி ஆற்றுக்கு செல்லும் படித்துறைகள் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளன.
சமீபத்தில், மகாளய அமாவாசையன்று பராமரிப்பில்லாத படித்துறைகளால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.
அவற்றை புதுப்பித்து, மேம்படுத்த சம்பந்தப்பட்ட பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.