/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தவயல் செல்லும் சாலை, பாலம் மூழ்கும் அபாயம்
/
காந்தவயல் செல்லும் சாலை, பாலம் மூழ்கும் அபாயம்
ADDED : ஜூலை 02, 2025 11:44 PM

மேட்டுப்பாளையம்; பவானிசாகர் அணையின் நீர்மட்டம், உயர்ந்து வருவதால், காந்தவயலுக்குச் செல்லும் சாலையும், பாலமும், தண்ணீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மண் கொட்டி சாலையை உயர்த்த வேண்டும் என, மலைவாழ் மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய பகுதிகள் உள்ளன. காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது.
ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்ட பாலம் தண்ணீர் அதிகமாகும் போது மூழ்கி விடும். இதைத் தொடர்ந்து ரூ. 15 கோடியே 40 லட்சம் செலவில் புதிதாக பாலம் கட்டும் பணிகள் துவங்கின.கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை காந்தையாற்றிலும், பவானி ஆற்றிலும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கட்டுமான பணிகள் தடை பட்டன. இதுகுறித்து காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறியதாவது:
பவானிசாகர் அணையில் இன்னும் மூன்று அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தால், காந்தையாற்றின் குறுக்கே கட்டியுள்ள பழைய பாலமும், மண் சாலையும் தண்ணீரில் மூழ்கி விடும். அதன் பிறகு பரிசல் பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் மெத்தனமாக செயல்பட்டதால், பாலம் கட்டும் பணிகள் தொய்வாக நடந்துள்ளன. விவசாயிகளும் தங்கள் விளை பொருட்களை பரிசலில் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும். தற்போதுள்ள மண் சாலை தண்ணீரில் மூழ்கினால், அரை கிலோ மீட்டருக்கு பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பரிசல் பயணம் ஆபத்தானது.
எனவே தற்போதுள்ள மண் சாலையில், மண் கொட்டி உயர்த்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மலைவாழ் மக்கள் கூறினர்.