வடிகால் வசதி இல்லாமல் சாலை அமைப்பதா! கேள்வி கேட்டு விவசாயிகள் காட்டம்
வடிகால் வசதி இல்லாமல் சாலை அமைப்பதா! கேள்வி கேட்டு விவசாயிகள் காட்டம்
ADDED : ஜன 27, 2026 05:14 AM

அன்னூர்: 'வடிகால் வசதி செய்யாமல் சாலை அமைக்கப்படுகிறது,' என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அன்னூர், கோவை சாலையில், கே.ஜி. மில்லை ஒட்டி, குமாரபாளையம் செல்லும் பாதை உள்ளது. இந்தப் பாதையில் அதிக அளவில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் ஒரு கி.மீ., தொலைவிற்கு புதிதாக தார் ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தற்போது ஊராட்சிக்கு சொந்தமான, 30 அடி அகல பாதையில் முழுவதும் தார் ரோடு அமைக்கப்படுகிறது.
இருபுறமும் மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதி இல்லை. எதிர்காலத்தில் வடிகால் அமைக்க இடமும் விடப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் வடக்கு பகுதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் அதிக அளவில் புகுந்துவிடும். இதுகுறித்து கரியாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தோம். ஒன்றிய பொறியாளர் நேரடியாக வந்து ஆய்வு செய்தார். வடிகால் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.எனினும் தற்போது வடிகாலுக்கு இடம் ஒதுக்கப்படாமலே முழு பாதைக்கும் தார் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
