/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
/
குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
குழாய் உடைப்பால் பழுதானது ரோடு; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 02, 2025 09:58 PM

பெ.நா.பாளையம்; கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில், குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வெளியேறுவதால் ரோடு பழுதடைந்து உள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்., மில்ஸ் பிரிவு பகுதியில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் ஓரத்தில் உள்ள இணைப்பு சாலையில், பில்லூர் அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதனால் வெளியேறும் தண்ணீர் ரோட்டில் நிரம்புவதால், சாலை குண்டும், குழியும் ஆகிவிடுகிறது.
இதுகுறித்து, பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில் தற்போது உடைப்பு ஏற்பட்டு சாலையில் அதிகளவில் தண்ணீர் தேங்குவதால், சாலை பழுதடைந்து உள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலை துறையினர் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறையினருக்கு, கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு ரோட்டில் ஏற்பட்டிருந்த குழிகளை மண் நிரப்பி சரி செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன் கூறுகையில், சாலையில் உள்ள குறைபாடு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படவில்லை.
இதனால் குடிநீர் குழாய் உடைப்பை செப்பனிட குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.