/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு சந்திப்பு விரிவாக்கம்; கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்படுமென அதிகாரிகள் உறுதி
/
ரோடு சந்திப்பு விரிவாக்கம்; கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்படுமென அதிகாரிகள் உறுதி
ரோடு சந்திப்பு விரிவாக்கம்; கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்படுமென அதிகாரிகள் உறுதி
ரோடு சந்திப்பு விரிவாக்கம்; கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அளவீடு செய்யப்படுமென அதிகாரிகள் உறுதி
ADDED : நவ 26, 2025 05:39 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில், விரிவாக்கப் பணிக்காக கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு வழியாக, பல்லடம், திருப்பூர், உடுமலை, பழநிக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அதில், நியூஸ்கீம் ரோடு - பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியை மேம்படுத்தி ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு பகுதியில் அரசமரத்தடியில் விநாயகர் கோவில் இருந்தது. ரோடு விரிவாக்கத்துக்காக, விநாயகர் சிலை அருகே உள்ள கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அரச மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு அதே பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே மறு நடவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மதுரைவீரன் கோவிலுக்கு சொந்தமான இடத்தையும், நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததுடன், நேற்று கோவில் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கூறியதாவது:
மதுரைவீரன் கோவிலுக்கு சொந்தமான, 7.4 சென்ட் இடம் உள்ளது. முதலில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த அரச மரம் எடுப்பதால், விநாயகர் சிலையை எடுக்க கூறினர். சிலையை எடுத்து கோவிலில் வைத்துள்ளோம்.
தற்போது, கோவிலுக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து எடுத்து ரோடு போடும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், நியூஸ்கீம் ரோடு திரும்பும் பகுதியில், மழைநீர் வடிகால் உயரமாக கட்டியுள்ளனர். இதில் இருந்து வரும் கழிவுநீர், கோவில் கருவறைக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஹிந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், 'கோவில் இடம் குறித்து அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதியளித்தனர். இதையடுத்து, அங்கு கூடிய மக்கள் கலைந்து சென்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சாலை சந்திப்பை மேம்படுத்தும் வகையில், ஒரு கோடியே, 80 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறைக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, உடைந்திருந்த மழைநீர் வடிகால் புதியதாக அமைக்கப்பட்டது. கோவில் இடத்தை எங்கேயும் ஆக்கிரமிக்கவில்லை,' என்றனர்.

