/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீருக்காக சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
/
குடிநீருக்காக சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : பிப் 20, 2025 06:34 AM
போத்தனூர்; கோவை, மதுக்கரையை அடுத்து பாலத்துறை பஞ்.,க்குட்பட்ட ஆறு, ஏழு மற்றும் எட்டாவது வார்டுகளில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இப்பகுதிகளுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக, தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. நேற்று வினியோகம் செய்தபோதும், ஒரு மணி நேரம் மட்டுமே வந்தது. அதிருப்தியடைந்த மக்கள், நாச்சிபாளையம் சந்திப்பில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, மதுக்கரை போலீசார் அங்கு சென்று, மக்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிடச் செய்தனர். இம்மறியலால் அவ்வழியே, 15 நிமிடத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'கடந்த இரு ஆண்டுகளாக பலர் வரி செலுத்தவில்லை. கடந்த வாரம் உடனடியாக வரியை கட்ட பஞ்.,லிருந்து அறிவிப்பு செய்தனர். இன்று தண்ணீர் வினியோகிக்கும் நேரத்தை குறைத்து விட்டனர்.
இது குறித்து, பஞ்., செயலரிடம் கேட்டபோது, வரியை கட்டுங்கள் என்கிறார். இங்குள்ள பெரும்பாலானோர் கூலி வேலைக்கு செல்பவர்கள்.
எப்படி பெரிய தொகையை உடனே செலுத்த முடியும். அதுபோல், இந்நடவடிக்கையால் வரி கட்டியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆதலால், வரி வசூலை காரணம் காட்டி, குடிநீர் வினியோக நேரத்தை குறைக்கக்கூடாது' என்றனர்.

