/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோடு... படுத்தும் பாடு! : பஸ்கள் இயக்க சிரமப்படும் ஓட்டுநர்கள்: அவசர தேவைக்கு அல்லல்படும் மக்கள்
/
ரோடு... படுத்தும் பாடு! : பஸ்கள் இயக்க சிரமப்படும் ஓட்டுநர்கள்: அவசர தேவைக்கு அல்லல்படும் மக்கள்
ரோடு... படுத்தும் பாடு! : பஸ்கள் இயக்க சிரமப்படும் ஓட்டுநர்கள்: அவசர தேவைக்கு அல்லல்படும் மக்கள்
ரோடு... படுத்தும் பாடு! : பஸ்கள் இயக்க சிரமப்படும் ஓட்டுநர்கள்: அவசர தேவைக்கு அல்லல்படும் மக்கள்
ADDED : பிப் 22, 2024 04:49 AM

மேட்டுப்பாளையம்: பில்லுார் அணைக்கு செல்லும் சாலை, குண்டும், குழியாக உள்ளதால், பஸ் இயக்க சிரமமாக உள்ளது என, ஓட்டுநர்கள் புலம்புகின்றனர். 'அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல எந்த வாகனங்களும், பில்லுார் அணை பகுதிக்கு வருவதில்லை என, மலைவாழ் மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதி வழியாக, பில்லுார் அணைக்கு செல்ல வேண்டும். பில்லுார் அணைப்பகுதியில் கோரபதி, நீராடி, பரளி, பரளிக்காடு, பில்லுார் அணை, கீழ்பில்லுார் என, பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
பில்லுார் அணை, 1961ம் ஆண்டு கட்டும் பணிகள் துவங்கின. 1967ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. 7 ஆண்டுகள் கட்டும் பணிகள் நடைபெற்றுள்ளன. அணை கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு வர, வெள்ளியங்காட்டில் இருந்து, பில்லுார் வரை, 25 கிலோ மீட்டருக்கு, மலைப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை வனப்பகுதியில் அமைந்திருந்தாலும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையை பராமரிக்கும் பணியை, மின்வாரிய நிர்வாகம் செய்து வந்துள்ளது. இந்த சாலை அமைத்து, 62 ஆண்டுகள் ஆகின்றன.
இதில், வெள்ளியங்காட்டில் இருந்து முள்ளி வரை உள்ள சாலைக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தால், கடந்தாண்டு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. முள்ளியிலிருந்து பில்லுார் அணை வரை, 12 கி.மீ.,க்கு, சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒரு நாளைக்கு நான்கு முறை, பில்லுார் அணைக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதில் மலைவாழ் மக்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால் சாலை மிகவும் குழியாக உள்ளதால், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து, மலைவாழ் மக்கள் கூறுகையில், 'முள்ளியில் இருந்து பில்லுாருக்கு வரும் சாலை, மிகவும் மோசமாக உள்ளது. அதனால், மருத்துவமனைக்கு செல்ல ஜீப்கள், கார்கள் எங்கள் கிராமங்களுக்கு வருவதில்லை. அரசு பஸ் வரும்வரை காத்திருந்து, அதில் பயணம் செய்து வருகிறோம். அவசர தேவைக்கு, மருத்துவமனைக்கு எங்களால் செல்ல முடிவதில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம், பில்லுார் அணை சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், 'வெள்ளியங்காட்டில் இருந்து முள்ளி வரை, மலைப்பகுதியில் சிரமம் இல்லாமல் பஸ் இயக்க முடிகிறது. முள்ளியிலிருந்து பில்லுார் வரையுள்ள சாலை, குண்டும், குழியுமாக உள்ளதால், பஸ்களை இயக்க சிரமமாக உள்ளது. நான்கு முறை பஸ்களை ஓட்டினால், உடலில் வலி ஏற்படுகிறது. எனவே, பில்லுார் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து, காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா கூறுகையில், ''காரமடை வனப்பகுதியில் பில்லுார் அணைக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. ஆனால், இந்த சாலையை பராமரிக்கும் பணியானது, தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் உள்ளது. அவர்கள் தான், இந்த சாலைக்கு புதிதாக தார் போட வேண்டும்,'' என்றார்.