/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோலிங் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு; மலைப்பாதை வளைவுகளில் தீவிரம்
/
ரோலிங் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு; மலைப்பாதை வளைவுகளில் தீவிரம்
ரோலிங் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு; மலைப்பாதை வளைவுகளில் தீவிரம்
ரோலிங் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு; மலைப்பாதை வளைவுகளில் தீவிரம்
ADDED : மார் 31, 2025 09:49 PM

பொள்ளாச்சி; வால்பாறை மலைப்பாதையில், விபத்துகளை தடுக்கும் வகையில், 'ரோலிங் பாதுகாப்பு தடுப்பு' அமைக்கும் பணி, பெருமளவு நிறைவடைந்துள்ளது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் இருந்து வால்பாறைக்கு செல்லக்கூடிய வழித்தடம், 43 கி.மீ., துாரம் மலைப்பாதையில், 40 கொண்டை ஊசி வளைவுகளுடன் நீள்கிறது. வால்பாறை மட்டுமின்றி, அங்கிருந்து கேரளா மாநிலம் அதிரப்பள்ளிக்கு வனப்பகுதியின் நடுவே செல்லும் சாலை அமைந்துள்ளதால், அதிகளவிலான சுற்றுலா பயணியர், இந்த மலைப்பாதையில் பயணிக்கின்றனர்.
இதனால், பாதுகாப்பு கருதி, ரோட்டோரம் இரும்பு தகடு அமைக்கப்பட்டும், விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைத்தும், வாகன ஓட்டுநர்கள் 'அலர்ட்' செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஆபத்தான மலைப்பாதை வளைவுகளில், நெடுஞ்சாலைத்துறையால், 'ரோலிங் பேரியர் கார்ட்ரெயில்' எனும் ரோலிங் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுவருகிறது. இதில், வாகனங்கள் மோதினால் கூட, சேதம் ஏற்படாமல் இருக்கும் வகையில், ரப்பர் வளையங்கள் காணப்படுகின்றன.
இரவு நேரங்களில் ரப்பரில் உள்ள மஞ்சள் நிறம், வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தால் 'ரிப்ளக்ட்' ஆவதால், வாகன ஓட்டுநர்களும் பாதுகாப்புடன் கடந்து செல்கின்றனர். இதற்கான பணிகள் பெருமளவு நிறைவடைந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
மலைப்பாதையில் இரண்டு மற்றும் மூன்றாவது கியரைத்தவிர்த்து, 'டாப்' கியரில் கீழ் நோக்கி வாகனங்களை இயக்குதல், அஜாக்கிரதை போன்ற பல்வேறு காரணங்களால் விபத்து ஏற்படும். இந்த ரோலிங் தடைகள் ஒரு வாகனத்தை மீண்டும் சாலைக்குக் கொண்டு வரும் அல்லது நிறுத்தச் செய்யும். தற்போது, 9வது கொண்டை ஊசி வளைவில், இதற்கான பணிகள் முழுமை பெற்றுள்ளன.
இவ்வாறு, கூறினர்.

