/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுசு, புதுசா கடைகளில் காதல் பரிசு விற்பனைக்கு!
/
புதுசு, புதுசா கடைகளில் காதல் பரிசு விற்பனைக்கு!
ADDED : பிப் 13, 2025 12:18 AM

கோவை; காதலர் தினம் உலகம் முழுவதும், நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவையில் பரிசு பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. லவ் காலண்டர், கேப்சூல் வாழ்த்து கடிதம், போன்றவை இளைஞர்கள் பலர், விரும்பி வாங்கிச்செல்வதை காண முடிந்தது.
கடந்த பல ஆண்டுகளாக, காதலர்கள் தினம் என்றாலே தாஜ்மஹால், பூக்கள், சாக்லேட் மற்றும் எவர் கிரீன் வாழ்த்து மடல் பரிசுகளாக பகிரப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே, காதலர் தின பரிசுகள் புதுப்புது வடிவங்களில், உணர்வு ரீதியாக விற்பனைக்கு வருவதை, சந்தையில் பார்க்க முடிகிறது.
இந்த ஆண்டு, கண்ணாடி குடுவைக்குள் குட்டி வண்ண காகிதத்தில், காதல் கவிதைகளை எழுதி பரிசளிக்கும் கேப்சூல் வாழ்த்து கடிதம், காதலர்கள் ஒவ்வொரு நாளுக்கும் தனது எண்ணங்களை எழுத்துக்களாக பகிர்ந்து கொள்ளும் காதல் காலண்டர், ரெசின் கஸ்டமைஸ்டு கீ செயின், காதலர்கள் பயன்படுத்திய பொருட்கள், சிறு வயது போட்டோக்களை பதப்படுத்தி பாதுகாக்கும், ரெசின் ஆர்ட் பரிசுகள்... என பல பரிசு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
தவிர, வழக்கமான தாஜ்மஹால், புதுப்புது பிரேம்கள், செயற்கை பூக்கள், வாழ்த்து மடல் போன்றவையும் 20 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றன.
காதலர் தினத்தை முன்னிட்டு, கோவை மலர் சந்தையில் நேற்று, 20 ரோஜாக்கள் உள்ள ஒரு கட்டு, 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு ரோஜா 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக, ஒரு கட்டு, 200-300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
- துரை,
கோவை மலர் வியாபாரிகள் சங்கம்.