ADDED : ஆக 21, 2026 07:02 PM
அன்னுார்: அன்னுாரில், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப விளக்க பயிற்சி நடந்தது.
அன்னுார் வட்டாரத்தில், பல நூறு ஏக்கர் பரப்பளவில், மல்பெரி பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பட்டுப்புழு வளர்த்து, பட்டு உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசின் பட்டு வளர்ச்சி துறை சார்பில், ‘என் பட்டு, என் பெருமை’ என்னும் தலைப்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப விளக்க பயிற்சி கூட்டம் நடந்தது. பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பரக்கத் நிலோகர் தலைமை வகித்து பேசினார்.
விஞ்ஞானி இம்மானுவேல் கில்வெக்ஸ் பிரபு, பட்டு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிவித்தார். வேர் அழுகல் நோயால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இலை சுருட்டு புழு சாறு உறிஞ்சும் பூச்சிகளால், மல்பெரியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றுக்கான ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு முறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
