/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளை துரத்தும் ரோஜா செடிகள்! மாற்று விவசாயத்தால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
/
வனவிலங்குகளை துரத்தும் ரோஜா செடிகள்! மாற்று விவசாயத்தால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
வனவிலங்குகளை துரத்தும் ரோஜா செடிகள்! மாற்று விவசாயத்தால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
வனவிலங்குகளை துரத்தும் ரோஜா செடிகள்! மாற்று விவசாயத்தால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 01, 2025 11:12 PM

தொண்டாமுத்துார் : சாடிவயல் சீங்கப்பதிமலை கிராமத்தில், வனவிலங்குகளால் பயிர்கள் சேதம் ஏற்பட்டு வந்த நிலையில், மாற்றுப்பயிராக ரோஜா செடிகளை, மலைவாழ் மக்கள் சாகுபடி செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே அடர் வனப்பகுதியில், சீங்கப்பதி மலை கிராமம் உள்ளது. இங்கு, மலைவாழ் மக்களுக்கென, விவசாயம் செய்வதற்காக அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வந்தனர்.
வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ளதால், காட்டு யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள், விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், மக்கள் பெரும் நஷ்டங்களை சந்தித்தனர்.
இந்நிலையில், சீங்கப்பதி மலை கிராமத்தில், வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையிலும், புது வகை பயிரால் வருமானத்தை பெருக்கும் வகையிலும், புது முயற்சியாக ரோஜா செடிகள் சாகுபடி செய்துள்ளனர்.
வனவிலங்குகளுக்கு 'செக்'
சீங்கப்பதி மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் கூறியதாவது:
விளை நிலத்தில் நெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வது வழக்கம். ஆனால், காட்டு யானைகளால் நெற்பயிர்களும், காட்டுப்பன்றிகளால்மரவள்ளிக்கிழங்குகளும் சேதமடையும். இதனால் நாங்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தோம். இந்நிலையில், வனவிலங்குகள் தொடாத பயிரை சாகுபடி செய்ய நினைத்தோம்.
அதன்படி, பெங்களூருவில் இருந்து பட்டன் மற்றும் பன்னீர் ரோஜா நாற்றுக்கள் வாங்கி வந்து மூன்று ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ளோம். தற்போது, 10 மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை வனவிலங்குகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரோஜா செடிகளுக்கு எங்கள் பகுதி காலநிலைக்கு ஏற்றதாக உள்ளதால், தற்போது, பூக்கள் பூக்கத்துவங்கி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து வருகிறோம். ஒரு முறை, 25 கிலோ பூக்கள் கிடைக்கிறது.
இதை ஆலாந்துறையில் உள்ள பூக்கடைக்களுக்கு, கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். விளைச்சல் அதிகரிக்கும்போது, நகர்ப்புறங்களுக்கும் பூக்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அரசு சார்பில் மானியம் வழங்கினால், சாகுபடி அதிகரிக்க முடியும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.