மாதிரி பள்ளியில் கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
மாதிரி பள்ளியில் கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 19, 2026 05:16 AM
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாதிரி பள்ளியில் இரண்டு ஆய்வகங்கள், இரண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி 72வது வார்டு ஆர்.எஸ்.புரம் சுப்ரமணியம் சாலையில், மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி வளாகத்தில், தமிழக அரசின் மாதிரி பள்ளி (மாடல் ஸ்கூல்) செயல்படுகிறது.
அரசு பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுகிறது.
நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள 240 மாணவர்கள் படிக்கின்றனர்.வரும் கல்வியாண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகுப்பறைகள் கட்ட வேண்டியிருக்கிறது.
கூடுதலாக தரைத்தளம் மற்றும் முதல் தளம், இரண்டாம் தளம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள், இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.
வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்படுகிறது. இதற்காக, ஒதுக்கியுள்ள 2 கோடி ரூபாயில் நடப்பு நிதியாண்டில் ஒரு கோடி, அடுத்த நிதியாண்டில் ஒரு கோடி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணி நடக்கும்போது, பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும், ஸ்டீல், சிமென்ட், செங்கல் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
