/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுத்திகரிக்கும் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்த ரூ.245 கோடி திட்டம்
/
சுத்திகரிக்கும் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்த ரூ.245 கோடி திட்டம்
சுத்திகரிக்கும் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்த ரூ.245 கோடி திட்டம்
சுத்திகரிக்கும் கழிவு நீரை மீண்டும் பயன்படுத்த ரூ.245 கோடி திட்டம்
ADDED : ஜன 01, 2026 05:17 AM
கோவை: ''உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து வெளியேற்றும் நீரை, மீண்டும் ஒரு முறை சுத்திகரித்து, மறுஉபயோகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் ரூ.245 கோடியில் செயல்படுத்த இருக்கிறோம்,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
ஆத்துப்பாலம் முதல் நஞ்சுண்டாபுரம் வரை நொய்யல் ஆற்றின் கரையை பலப்படுத்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, தமிழக அரசுக்கு அனுப்பிய ரூ.200 கோடிக்கான திட்ட அறிக்கைக்கு பிப்., மாதத்துக்குள் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளது. சின்னவேடம்பட்டியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்த கழிவு நீரை ஏரியில் தேக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்களுடன் பேசி வருகிறோம்.
உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 3.2 - 4 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. அதில், 2.5 கோடி லிட்டர் கழிவு நீரை மீண்டும் ஒரு முறை சுத்திகரித்து, குடிநீர் அல்லாத இதர பயன்பாட்டுக்கு வழங்க உள்ளோம். மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ரூ.245 கோடியில் இப்பணி மேற்கொள்ள உள்ளோம். ஆசிய வளர்ச்சி வங்கிக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது; பிப்.,க்குள் அனுமதி கிடைக்கும். 25 இடங்களில் தொட்டி கட்டி, சுத்திகரித்த நீரை சேமித்து, குழாய் அமைத்து, மறு உபயோகத்துக்கு வினியோகிக்கப்படும். கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
கட்டுமான பணிக்காக நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, லாரிகளில் கொண்டு சென்று வினியோகிக்கின்றனர். அவர்கள் சுத்திகரித்த நீரை பயன்படுத்தினால், நிலத்தடி நீர் உறிஞ்சுவதை தவிர்க்கலாம். கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் அளவுக்கு சுத்திகரித்த நீரின் தரத்தை கொண்டு வரும் அளவுக்கு தொழில்நுட்பம் வந்து விட்டது.
வாலாங்குளத்தில் அமைத்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அதிகமான ஒலி வருவதாக, அருகிலுள்ள சர்ச்சில் இருந்து ஆட்சேபனை தெரிவித்தனர். அதை இயக்கும்போது எழும் ஒலியை குறைக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

