/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 64 பேருக்கு ரூ.31 லட்சம் மானியம்
/
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 64 பேருக்கு ரூ.31 லட்சம் மானியம்
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 64 பேருக்கு ரூ.31 லட்சம் மானியம்
கலைஞர் கைவினைத் திட்டத்தில் 64 பேருக்கு ரூ.31 லட்சம் மானியம்
ADDED : மே 17, 2025 04:37 AM
பொள்ளாச்சி, : கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 64 பயனாளிகளுக்கு ரூ.31.88 லட்சம் மானிய தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
கட்டட வேலைகள், மர வேலைபாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைப் பொருட்கள், காலணிகள் தயாரித்தல் உட்பட 25 வகையான பல்வகை கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு, மேம்பட்ட பயிற்சியுடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில் செய்ய, ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாமல், மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் வாயிலாக வழங்கப்படுகிறது.
கடன் தொகையில், 25 சதவீதம், அதிகபட்சம் 50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், திட்டத்தின் கீழ் கடன் வழங்க தகுதி பெற்றவை.
திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், எந்த வகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ, அந்த தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
திட்டத்தில் இதுவரை, 819 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 595 விண்ணப்பங்கள் வங்கிக்கு பரிந்துரைக்கப்பட்டதில், 251 விண்ணப்பங்கள் கடனுதவி ஒப்பளிப்புகள் பெறப்பட்டுள்ளன. மேலும், இந்நிதியாண்டில், 64 பயனாளிகளுக்கு ரூ.31.88 லட்சம் மானியத் தொகையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமும், தேவையும் உள்ள கைவினைஞர்கள், திட்டத்தின் கீழ் பயன்பெற, www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க, தனி நபரின் புகைப்படம், ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய, தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ், திட்ட அறிக்கை இவை மட்டுமே போதுமானவை.
சுய சான்றிதழ் மாதிரிப் படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை, இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். திட்டம் குறித்த தகவல்கள் பெறவும், விண்ணப்ப பதிவு தொடர்பான ஆலோசனை, வழிகாட்டுதல் பெறவும், 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2, ராஜவீதி, கோவை' அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0422 - 2391678 ஆகிய எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.