/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.55 கோடி கோவில் நிலம் மீட்பு
/
ரூ.55 கோடி கோவில் நிலம் மீட்பு
ADDED : ஜூலை 29, 2025 05:05 AM

தொண்டாமுத்தூர்:
மாதம்பட்டியில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 55 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலின் உப கோவிலான அன்னியூரம்மன் கோவில், மாதம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 11 ஏக்கர் நிலம், மாதம்பட்டி சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டி உள்ளது.
இந்நிலத்தை, தனியார் ஆக்கிரமித்து ஒரு பகுதியில் மட்டும் வீடுகளை கட்டியிருந்தனர். இது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்விடத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்ததால், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி, உடனடியாக நிலத்தை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நேற்று காலை முதல் அறநிலையத்துறையினர், போலீசாரின் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றி, 55 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 ஏக்கர் நிலம் மற்றும் அதில் கட்டப்பட்டிருந்த, 10 வீடுகளையும் மீட்டனர்.