/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருகூர் - போத்தனுார் இரட்டைப் பாதைக்கு ரூ.277.42 கோடி
/
இருகூர் - போத்தனுார் இரட்டைப் பாதைக்கு ரூ.277.42 கோடி
இருகூர் - போத்தனுார் இரட்டைப் பாதைக்கு ரூ.277.42 கோடி
இருகூர் - போத்தனுார் இரட்டைப் பாதைக்கு ரூ.277.42 கோடி
ADDED : பிப் 11, 2026 06:43 AM

கோவை: இருகூர் - போத்தனுார் இரட்டை ரயில்பாதைக்கு ஒப்புதல் அளித்து, ரூ.277.42 கோடியை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியதால் ரயில்கள், சரக்கு போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில் நகரமான கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும், ஜவுளி, பம்ப், ஆட்டோமொபைல், ராணுவ தளவாட பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இதற்கான போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னை - கோவை - கேரளா வழித்தடம் எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. நெரிசலை தவிர்க்க, இருகூர் - போத்தனுார் இடையே இரட்டை ரயில்பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரட்டை ரயில் பாதை ஏற்படுத்தப்பட்டால், சரக்கு போக்குவரத்து அதிகரிக்கவும், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பயணியர் தேவைக்காக கூடுதலாக, 15 ரயில்கள் வரை இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று ரயில்வே நிர்வாகம் இருகூர் - போத்தனுார் இரட்டை ரயில்பாதைக்கு நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ரயில்பாதையில், 10.77 கி.மீ.,க்கு இரட்டை ரயில் பாதை ஏற்படுத்த ரூ.277.42 கோடி நிதியை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இதனால், சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு, 31.2 லட்சம் டன் அதிகரிக்கும். தற்போது இந்தப் பாதையின் பயன்பாடு, 60 சதவீதமாக உள்ளது. வரும், 2027 - -28 ம் ஆண்டில் இது, 131 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் கோவை தொழில் வளர்ச்சிக்கும், போத்தனுார் முனைய மேம்பாட்டிற்கும் உதவும்.
வடக்கு நோக்கிச் செல்லும் புதிய ரயில்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது 'எக்ஸ்' தளத்தில், இருகூர் - போத்தனுார் இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை லோக்சபா அலுவலகத்தில் சந்தித்து தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

