ADDED : ஜூலை 21, 2025 10:25 PM

அன்னுார்; ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.,) குருபூஜை விழா அன்னுார் கஸ்தூரி ஹாலில் நேற்று முன்தினம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., அன்னுார் ஒன்றிய தலைவர் யுவராஜ் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., கோவை கோட்ட பொறுப்பாளர் சபாபதி பேசுகையில், உலகிலேயே பழமையான தர்மம் இந்து தர்மம். பெரும் ஞானிகள், துறவிகள் பிறந்த நாடு இது. இந்த நாட்டில் பிறப்பதற்கு பெரும் தவம் செய்திருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் காவி கொடியை குருவாக ஏற்று வணங்குகிறோம். காவி கொடியை பார்த்தால் தியாகம் செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
ஆதிசங்கரர் எட்டு வயதில் வேதங்களை கற்றுத் தேர்ந்தவர். வேதங்களை சுருக்கி 555 சூத்திரங்கள் கொண்டதாக பிரம்ம சூத்திரத்தை எழுதினார். ஒவ்வொரு இந்துவும் தினமும் பிரம்ம சூத்திரத்தின் சில பகுதிகளையாவது வாசிக்க வேண்டும். இந்து தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.
விழாவில் பல்வேறு இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று காவிக்கொடிக்கு வணக்கம் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றனர்.