ADDED : ஜூலை 23, 2025 09:21 PM

சோமனுார்; சோமனுாரில் ஆர்.எஸ்.எஸ்., குரு பூஜை விழா நடந்தது.
சூலூர் வட்டார ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் சார்பில், சோமனுார் செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், குரு பூஜை விழா நடந்தது. காமாட்சி புரி ஆதினம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
கோவை கோட்ட ஆர்.எஸ்.எஸ்., இணை செயலாளர் விஜய் பேசியதாவது: மாதா,பிதா, குரு, தெய்வம் என நமக்கு நம் முன்னோர்கள் கற்பித்துள்ளனர். எல்லாவற்றையும் இறைவனாக பார்க்கும் வாழ்க்கை முறை நம்முடையது.
நம் எல்லோருக்கும் பொதுவான ஒன்றான காவிக்கொடியை நாம் குருவாக ஏற்றுக்கொண்டுள்ளோம். பண்டைய காலம் முதலே குரு, சிஷ்யன் உறவு முறை இருந்து வருகிறது. தாய், தந்தையை மதித்து போற்ற வேண்டும். கூட்டு குடும்ப வாழ்க்கையின் உன்னதத்தை அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க வேண்டும். நம் பாரம்பரிய, கலாசாரங்களை பாதுகாக்க வேண்டும். நூற்றாண்டு விழா கொண்டாடி வரும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம், உலகின் குருவாக நமது நாட்டை உயர்த்திட பல்வேறு பணிகளை அர்ப்பணிப்போடு செய்து வருகிறது. இந்துக்கள் ஒற்றுமை ஓங்கவும், சமுதாயம் முன்னேற்றம் அடைந்து நாடு முன்னேற நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட தலைவர் சம்பத்குமார், தொழிலதிபர் மணிவாசகன், கொ.ம.தே.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் காவிக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.