/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளை பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்! விழிப்புடன் இருக்க டாக்டர்கள் 'அட்வைஸ்'
/
குழந்தைகளை பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்! விழிப்புடன் இருக்க டாக்டர்கள் 'அட்வைஸ்'
குழந்தைகளை பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்! விழிப்புடன் இருக்க டாக்டர்கள் 'அட்வைஸ்'
குழந்தைகளை பாதிக்கும் ஆர்.எஸ்.வி., வைரஸ்! விழிப்புடன் இருக்க டாக்டர்கள் 'அட்வைஸ்'
ADDED : செப் 25, 2024 08:59 PM

கோவை : குழந்தைகளிடம் ஆர்.எஸ்.வி., வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளதால், விழிப்புடன் இருக்க பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பை தடுக்கவும், பரவுவதை தவிர்க்கவும் சிலர் மாஸ்க் அணிந்து நடமாடுவதை காண முடிந்தது.
கொரோனா பாதிப்புக்குப் பின் பல்வேறு நோய்த் தொற்றுகள், மக்களை படாதபாடுபடுத்தி வருகின்றன.
கோவை அரசு மருத்துவமனையில் நேற்று, காய்ச்சல் பாதிப்புக்குள்ளான, 64 புறநோயாளிகள், 3 உள்நோயாளிகள், டெங்கு பாதிப்புக்குள்ளான ஐந்து பெரியவர்கள், இரு குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதற்கு ஆர்.எஸ்.வி., எனும் வைரஸ்தான் காரணம் என்று, டாக்டர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ரெஸ்பிரேட்டரி சின்சேஷியல் வைரஸ் (ஆர்.எஸ்.வி.,) எனும் இந்த வைரஸ், இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகளில் காணப்படும், பரவக்கூடிய நோய்த்தொற்று. சாதாரண சளி, காய்ச்சல் போல் தோன்றி, கவனிக்காமல் விட்டால், சிலருக்கு இது உயிரிழப்புக்கு வழி வகுக்கலாம்.
இரண்டு வயதுக்கு குறைவான அல்லது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, ஆர்.எஸ்.வி., பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கின்றனர் டாக்டர்கள்.
குழந்தைகள் நல மருத்துவர் அஸ்வத் கூறியதாவது:
தற்போது, ஆர்.எஸ்.வி., வைரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். வெளிநாடுகளில் ஆர்.எஸ்.வி., தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் போடப்படுகிறது.
இதன் காரணமாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது தான் இந்த தடுப்பூசி பிரபலம் அடைந்து வருகிறது.
பாதிப்பு பரவாமல் தடுக்க, கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக, பெற்றோர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால், குழந்தைகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.
வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வரும் போது கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தையை, பள்ளிக்கு அனுப்பி வைப்பதால் மற்ற குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு, முழு ஓய்வு அளிக்க வேண்டும். இந்நோய் கண்டு பயப்படத்தேவையில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது காலநிலை காரணமாக காய்ச்சல், சளி, ஆகியவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், ''காலையில் நிலவும் அதிக பனியால், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், கோவையை பொறுத்தவரை, குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் பாதிப்பே இருக்கிறது. இத்துடன் ஒரு சில வைரஸ் பாதிப்புகளாலும், காய்ச்சல் ஏற்படுகிறது.
இவற்றுக்கு சாதாரண சிகிச்சையே போதுமானது. பெரும்பாலும் பெரியவர்களிடம் இருந்தே குழந்தைகளுக்கு பாதிப்பு பரவுகிறது,'' என்றார்.