/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு சம்பளமில்லை; சென்ட்ரல், தெற்கு ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலி
/
ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு சம்பளமில்லை; சென்ட்ரல், தெற்கு ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலி
ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு சம்பளமில்லை; சென்ட்ரல், தெற்கு ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலி
ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு சம்பளமில்லை; சென்ட்ரல், தெற்கு ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலி
ADDED : ஏப் 17, 2025 07:14 AM
கோவை; கோவை தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.,) பணியிடங்கள், இரண்டு மாதமாக காலியாக இருக்கிறது. அதன் காரணமாக, இவ்விரு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
கோவை மண்டல இணை போக்குவரத்து கமிஷனர் கட்டுப்பாட்டில், கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, மத்தியம், மேற்கு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலுார் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த பிப்., மாதம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,), வெவ்வேறு நகரங்களுக்கு இட மாறுதல் செய்யப்பட்டனர். அதன்படி, தெற்கு ஆர்.டி.ஓ., பாலமுருகன் மதுரைக்கும், சென்ட்ரல் ஆர்.டி.ஓ., சத்யகுமார் மேட்டுப்பாளையத்துக்கும் மாற்றப்பட்டனர். இவ்விரு பணியிடத்துக்கும் வேறு அதிகாரிகள் இப்போது வரை நியமிக்கப்படவில்லை.
சென்ட்ரல் ஆர்.டி.ஓ., பணியிடத்தை, வடக்கு ஆர்.டி.ஓ., கூடுதலாக கவனித்து வருகிறார். இதேபோல், தெற்கு ஆர்.டி.ஓ., பணியிடத்தை, அலுவலக நேர்முக உதவியாளர் கூடுதலாக கவனித்து வருகிறார்.
பணிகள் கடுமையாக பாதிப்பு
வட்டார போக்குவரத்து அலுவலகம் என்பது மிகவும் முக்கியமான இடம். லைசென்ஸ் வாங்குவது, புதுப்பிப்பது, வாகனங்கள் பதிவு செய்தல், எப்.சி., புதுப்பித்தல், பெர்மிட் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்ட்ரல், தெற்கு என இரண்டு ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆர்.சி., வழங்குதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆர்.டி.ஓ.,க்களை சந்திக்க வருவோர் பாதிக்கப்படுகின்றனர். வடக்கு ஆர்.டி.ஓ., அவரது பணியை முடித்து விட்டு, சென்ட்ரல் அலுவலகம் வருகிறார். அதுவரை விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இல்லையெனில், துடியலுாரில் உள்ள வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. அச்சமயத்தில் ஆய்வு பணிக்கு அவர் வெளியே சென்றிருந்தால், மக்களுக்கு தேவையற்ற அலைச்சலே ஏற்படுகிறது.
இரு மாதங்களாக சம்பளமில்லை
இச்சூழலில், கோவை தெற்கு மற்றும் சென்ட்ரல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பிப்., மற்றும் மார்ச் மாதங்களுக்கான சம்பளம், இதுவரை வழங்கப்படவில்லை என்கிற தகவல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விசாரித்தபோது, 'ஆர்.சி., அட்டை அச்சிடும் பிரச்னை மாநிலம் தழுவியது. மென்பொருள் பிரச்னையால் இழுபறியாக இருந்தது. அதற்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு விட்டது.
அட்டை அச்சிடும் பணி துவங்கி விட்டது; விடுமுறை தினம் என்றாலும் கூட சனிக்கிழமையும் அச்சிட அறிவுறுத்தியுள்ளோம். அப்பிரச்னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு கிடைக்கும்.
இரு அலுவலகங்களுக்கு, ஆர்.டி.ஓ.,க்கள் இல்லாததால், ஊழியர்களுக்கு இரு மாதங்களாக சம்பளம் வரவில்லை என்பது உண்மையே. சம்பள பில்களை பொறுப்பு அதிகாரிகள் சமர்ப்பித்தால், கருவூலக அலுவலர்கள் ஏற்றுக்கொள்வதில்லை' என்றனர்.