ADDED : மார் 26, 2025 10:22 PM

பெ.நா.பாளையம்:
மேட்டுப்பாளையம் ரோட்டில் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலத்தின் நடைபாதை குப்பைமேடானது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே குமரபுரம் பாலத்தின் இரு புறமும், பொதுமக்கள் நடந்து செல்ல நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் ரோட்டில் வாகன நெருக்கம் உள்ள நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று, வர இந்த நடைபாதைகள் அமைக்கப்பட்டன. இங்கு இரவு நேரங்களில் குப்பை மற்றும் பல்வேறு இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், பொதுமக்கள் நாளடைவில் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' நடைபாதை குப்பைமேடானதால், இரவு நேரங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இப்பகுதியில் அதிகம். தெரு விளக்கும் இல்லை.
எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக நடை பாதையை பயன்படுத்த குருடம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தவும், எதிர்காலத்தில் இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.