/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 இடங்களில் ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகள்
/
10 இடங்களில் ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 20, 2025 11:17 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில், 10 இடங்களில் இந்திய ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெறும், என, இந்திய ரஷ்ய கலாசார நட்புறவுக் கழக செயலாளர் தங்கப்பன் தெரிவித்தார்.
இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவு கழகமும், ரஷ்ய தூதரகத்தின் கலாசார பிரிவும் இணைந்து, இந்தியாவில் தமிழகத்தில் ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகளை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இரண்டு ஆண்கள் உட்பட, 19 ரஷ்ய கலைஞர்கள் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில், நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் செயலாளர் மோகன்தாஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் ரஷ்யாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும், பத்துக்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இது குறித்து இந்திய ரஷ்ய கலாசார நட்புறவுக் கழக செயலாளர் தங்கப்பன் கூறியதாவது:
இந்திய--ரஷ்ய கலாசார உறவுகள், வரலாற்றில் சரித்திர பூர்வமானதாகும். கலாசார பரிவர்த்தனை மிக முக்கியமானதாக உள்ளது. இந்த நடன நிகழ்ச்சியில், இரண்டு நாடுகளின் பாரம்பரிய கலை நடனங்கள், இடம் பெறுகின்றன. கடந்த, 22 ஆண்டுகளாக இந்த நடன நிகழ்ச்சியை, இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கலாசார உறவுகள், பாரம்பரிய கலைகள் மேம்பட உள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில், 18 இடங்களில், ரஷ்ய கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் கோவை மாவட்டத்தில் மட்டும், 10 இடங்களில், அதிகளவில் கல்வி நிறுவனங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். நடன நிகழ்ச்சியை பள்ளி மாணவ, மாணவியர் கண்டு ரசித்தனர்.

