ADDED : டிச 31, 2024 05:01 AM

வால்பாறை, : வால்பாறையில், துாய இருதய ஆலய தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்தது.
வால்பாறை துாய இருதய ஆலயத்தின் நுாற்றாண்டு விழா, இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து, ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நடந்த விழாவில், ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆலயத்தில் இருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு புனித ஜெபஸ்தியர் அம்பு எடுத்து செல்லப்பட்டு வழிபாடு நடந்தது.
முக்கிய நிகழ்வாக, கடந்த, 28ம் தேதி ஆடம்பர தேர்பவனி நடந்தது. முன்னதாக, கோவை மறை மாவட்ட பொருளாளர் குரு ஆண்டனி செல்வராஜ் கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினார். இரவு, 7:30 மணிக்கு துாய இருதய ஆண்டவர், புனித செபஸ்தியார், வேளாங்கண்ணி மாதா சொரூபம் தாங்கி தேர்பவனி வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது.
விழாவில், நேற்று முன்தினம் காலை கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனீஸ் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றினார். விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.