/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னெடுத்த மண் காப்போம் இயக்கத்திற்கும், தன்னார்வலர்களுக்கும் சத்குரு வாழ்த்து
/
முன்னெடுத்த மண் காப்போம் இயக்கத்திற்கும், தன்னார்வலர்களுக்கும் சத்குரு வாழ்த்து
முன்னெடுத்த மண் காப்போம் இயக்கத்திற்கும், தன்னார்வலர்களுக்கும் சத்குரு வாழ்த்து
முன்னெடுத்த மண் காப்போம் இயக்கத்திற்கும், தன்னார்வலர்களுக்கும் சத்குரு வாழ்த்து
UPDATED : அக் 31, 2025 10:47 AM
ADDED : அக் 31, 2025 10:46 AM

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ICUN) சார்பில், அபுதாபியில் நடைபெற்ற உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு மாநாட்டில், மண் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தீர்மானம்-007 நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான தொடர் முயற்சிகளை முன்னெடுத்த மண் காப்போம் இயக்கத்திற்கும் தன்னார்வலர்களுக்கும் ஆதரவளித்தவர்களுக்கும் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) என்பது உலகளவில் 160 நாடுகளில் இருந்து 1,400-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஒரு உறுப்பினர் கூட்டமைப்பாகும். இது இயற்கை பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு தொடர்பான பணிகளில் ஈடுபடுகிறது. இவ்வமைப்பின் உலகளாவிய மாநாடு, அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தில் அக்டோபர் 09-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.
|  | 
இதில் மண் பாதுகாப்புச் சட்டத்திற்கான தீர்மானத்தை, 'ஔரோரா' என்ற மண் பாதுகாப்பு சிந்தனைக் குழுவின் ஆலோசனைகளுடன் சத்குருவின் மண் காப்போம் இயக்கம் மற்றும் அமெரிக்காவின் பேஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள எலிசபெத் ஹாப் சட்டப் பள்ளியின் சர்வதேச சுற்றுச்சூழல் சட்ட ஆய்வு மையம் ஆகியன இணைந்து முன்னெடுத்தன. மண் காப்போம் இயக்கத்தின் தொடர் முயற்சிகளினால் தற்போது இந்த தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேறியுள்ளது.
இதன் மூலம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் இதற்கான ஒரு பிரத்யேக பணிக்குழுவை உருவாக்கும். இந்த குழு மண் பாதுகாப்புக்கான சர்வதேச ஒப்பந்தம் அல்லது உலகளவில் பின்பற்றப்பட வேண்டிய சட்டவழிமுறைகளை உருவாக்கும். இது 'மாதிரி மண் பாதுகாப்புச் சட்டத்தை' உருவாக்க வழிவகுக்கும். மேலும் 90க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளை, அதன் தேசிய செயல்பாடுகளில் மண் பாதுகாப்பு சட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்து செயல்பட ஊக்குவிக்கப்படும்.
|  | 
இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தளப்பதிவில், “அபுதாபியில் நடைபெற்ற உலக வளம் காத்தல் மாநாட்டில், மண் பாதுகாப்புச் சட்டம் குறித்த தீர்மானம் 007-ஐ நிறைவேற்றிய ஐ.சி.யு.என் உறுப்பினர் அமைப்புக்கும், முன்மொழிந்தவர்களுக்கும், மண் காப்போம் இயக்கத்துக்கும், உடன் ஆதரவளித்தவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். மண்வளத்தை காக்க நிலையான ஈடுபாடும், ஒட்டுமொத்தமான அணுகுமுறையும் தேவை என்பதை உலகளவில் அங்கீகரிப்பது அவசியம். அந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படி இது. நிஜமான பணி இப்போதுதான் ஆரம்பிக்கிறது  - மண்ணுக்காகவும், நமது விவசாயிகளுக்காகவும், அனைத்து உயிர்களுக்காகவும், நமது எதிர்காலத்திற்காகவும் ஒன்றிணைவோம், வாருங்கள்!” எனக் கூறியுள்ளார்.
மண் காப்போம் இயக்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தலைமை அதிகாரி பிரவீனா ஸ்ரீதர் இது குறித்து கூறுகையில், “இந்த தீர்மானம் மண் பாதுகாப்பிற்கான வரலாற்று வெற்றி ஆகும். உலகளவில் மண் பாதுகாப்பிற்காக இயங்கும் மக்கள் மண் மீது கொண்டுள்ள காதல் மற்றும் கடின உழைப்பின் பலனாக இது நடைபெற்றுள்ளது. இதுவே வரலாற்றில் முதன்முறையாக ஒரு சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு உணவு, நீர், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் காலநிலை மீள்தன்மைக்கான அடிப்படை மண் தான் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. மேலும் இது உலகளவில் மண் பாதுகாப்பிற்கான உறுதியான சட்ட வழிமுறைகளை உருவாக்குவதற்கான பாதையை உருவாக்கியுள்ளது.” எனக் கூறினார்.
மாதிரி மண் பாதுகாப்புச் சட்டம் உலக நாடுகளை அதன் அனைத்து துறைகளிலும் மண் பாதுகாப்பை மையமாக கொண்டு செயல்பட வழிநடத்தும். மண் பாதுகாப்பில் நாடுகளுக்கு இருக்கும் சட்ட ரீதியான பொறுப்புகளை வலுப்படுத்தும். இதனுடன் இயற்கை விவசாயம் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதுடன் வருங்கால தலைமுறையினருக்காக சுற்றுச்சூழல் அடிதளத்தை பாதுகாக்கவும் இந்த சட்டம் உதவும்.
இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த தீர்மானம் சமர்பிக்கப்பட்டது. அது முதல் மண் காப்போம் இயக்கம் மற்றும் இதர அமைப்புகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் கனடா நாடுகளின் பிரதிநிதிகளோடு பல்வேறு சுற்று ஆலோசனைகளில் ஈடுபட்டனர். மேலும் மண்ணை பாதுகாக்க விரிவான, சட்டரீதியான வழிமுறைகளுக்கான அவசரத் தேவையை வலியுறுத்தி உலகளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டிலும் இந்த தீர்மானத்திற்காக மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்த தீர்மானம் நிறைவேற வாக்களித்தனர். அதாவது உறுப்பு நாடுகளின் 87% அரசு சார் நிறுவனங்களும் 95.45% அரசு சாரா நிறுவனங்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

