/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலங்கை எருதாட்டம் பக்தர்கள் திரண்டு வழிபாடு
/
சலங்கை எருதாட்டம் பக்தர்கள் திரண்டு வழிபாடு
ADDED : ஜன 18, 2024 01:38 AM

சூலூர் : விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கவும், பட்டணத்தில் பாரம்பரியமான சலங்கை எருதாட்டம் பக்தி பரவசத்துடன் நடந்தது.
சூலூர் அடுத்த பட்டணத்தில் உள்ள வீரமாட்சியம்மன் மற்றும் ராயர் கோவில் பழமையானது. இங்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருதாட்டம் நடப்பது வழக்கம். யாதவ சமுதாய மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று, வழிபாடுகள் நடத்தினர். முன்னதாக வீரமாட்சியம்மன், ராயர் பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளைகளை அனைவரும் மலர் தூவி வழிபட்டனர். பின்னர், காளைகளின் கால்களில் சலங்கைகளை கட்டினர். கைகளில் கம்புகளை வைத்து கொண்டு, உருமி மற்றும் பம்பை இசைக்கேற்ப, உரிமையாளர்கள் காளைகளின் முன் ஆடினர். காளைகளும் அதற்கேற்ப ஆடின. இதை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'விவசாயம் மற்றும் கால்நடைகள் செழிப்பாக இருக்க, எருதாட்டம் வாயிலாக இறைவனை வழிபடுகிறோம். 200 ஆண்டுகளாக இந்த எருதாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள போகம்பட்டி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உறவினர்கள் அனைவரும் வந்து பங்கேற்றனர்,' என்றனர்.