/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு 24 டன் ஜாதிக்காய் விற்பனை; மகசூல் குறைவால் கிலோ ரூ.470க்கு உயர்வு
/
கேரளாவுக்கு 24 டன் ஜாதிக்காய் விற்பனை; மகசூல் குறைவால் கிலோ ரூ.470க்கு உயர்வு
கேரளாவுக்கு 24 டன் ஜாதிக்காய் விற்பனை; மகசூல் குறைவால் கிலோ ரூ.470க்கு உயர்வு
கேரளாவுக்கு 24 டன் ஜாதிக்காய் விற்பனை; மகசூல் குறைவால் கிலோ ரூ.470க்கு உயர்வு
ADDED : நவ 14, 2024 08:44 PM
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே, கோட்டூரில் இருந்து கேரளாவுக்கு, 24 டன் ஜாதிக்காய் அனுப்பப்பட்டுள்ளது, என, ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோர கிராமங்களில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அண்டை மாநிலத்தை விட, ஆனைமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி உயர்தரமாக உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவ., மாதம் வரை அறுவடை நேரம் என்பதால், ஜாதிக்காய் அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
ஒரே தரம், ஒரே விலை என்ற அடிப்படையில் விற்பனை செய்யும் வகையில், விவசாயிகள் ஒன்றாக இணைந்து, பொள்ளாச்சி ஜாதிக்காய் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.
கடந்த, மூன்று நாட்களாக ஜாதிக்காய் சேகரித்து, தற்போது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், 500 ஏக்கரில் ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது தரம் பிரிக்கப்பட்டு, கேரளா மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஒரு கிலோ ஜாதிக்காய், 430 ரூபாயில் இருந்து, 470 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
கேரளா ஜாதிக்காய், பொள்ளாச்சி ஜாதிக்காய் என இரண்டு வகையாக பார்க்கும் நிறுவனங்கள், தரமாக உள்ளதால் பொள்ளாச்சி ஜாதிக்காய்க்கு நல்ல விலையை கொடுக்கின்றனர்.
கடந்த, மூன்று நாட்களாக சேகரிக்கப்பட்டு கோட்டூரில் தரம் பிரிக்கப்பட்டது. மூட்டை, மூட்டையாக, 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான, 24 டன் ஜாதிக்காய் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.
கடந்தாண்டை விட குறைவு
பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் கூறுகையில், 'கடந்தாண்டு பருவமழை பொய்த்தது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், மகசூல் குறைந்துள்ளது. மேலும், கேரளா ஜாதிக்காய் மகசூல் இல்லை.
அதே நேரத்தில், மார்க்கெட்டில் ஜாதிக்காய் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, ஒரு கிலோ, 350 ரூபாயாக இருந்த விலை தற்போது, 470 ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், பொள்ளாச்சி ஜாதிபத்ரி கிலோ, 2,900 ரூபாய் வரை விலை கிடைக்கும் என எதிர்பார்ப்புடன், இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜன., மாதம் விற்பனை செய்யப்படும்,' என்றனர்.