/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுாரில் வீடு இடிந்த விவகாரம்: மாற்று வீடு இலவசமாக வழங்க உறுதி
/
சங்கனுாரில் வீடு இடிந்த விவகாரம்: மாற்று வீடு இலவசமாக வழங்க உறுதி
சங்கனுாரில் வீடு இடிந்த விவகாரம்: மாற்று வீடு இலவசமாக வழங்க உறுதி
சங்கனுாரில் வீடு இடிந்த விவகாரம்: மாற்று வீடு இலவசமாக வழங்க உறுதி
ADDED : ஜன 22, 2025 11:58 PM
கோவை; கோவை மாநகராட்சி சார்பில், சங்கனுார் பள்ளத்தின் இரு கரையிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 68வது வார்டு ஹட்கோ காலனி புது அண்ணா வீதியில் தடுப்புச்சுவர் கட்டியபோது, தி.மு. க., விவசாய அணியை சேர்ந்த சுரேஷ் என்பவரது, கான்கிரீட் வீடு மற்றும் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து, பள்ளத்துக்குள் விழுந்தன.
நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்போருக்கு மாற்று வீடு வழங்கி, அப்புறப்படுத்த வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. அவ்வாறு செய்யாமல், வீடுகளின் பின்புற பகுதிகளை மட்டும், மாநகராட்சி இடித்து அகற்றுகிறது.
இச்சூழலில், தடுப்புச்சுவர் கட்டுவதற்காக பொக்லைன் இயந்திரத்தால் குழி தோண்டியபோது, கான்கிரீட் வீட்டின் பில்லரை இடித்ததால், அவ்வீடு முழுமையாக பெயர்ந்து விழுந்தது; அருகாமையில் இருந்த இரு வீடுகளும் இடிந்தன.
இவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் மூலம் மாநகராட்சி ஏற்பாடு செய்கிறது. மாற்று வீடு ஒதுக்கினாலும் பயனாளிகள் பங்களிப்பு தொகையாக, லட்சக்கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்படும்.
மாநகராட்சி பணியின்போது வீடுகள் இடிந்திருக்கின்றன; வீடுகளை காலி செய்யாமல் பணிகள் செய்ததும் அரசு துறை நிர்வாகத்தின் தவறு என்பதால், மாற்று வீடுகளை இலவசமாக வழங்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
ஏனெனில், தடுப்புச்சுவர் கட்டுவதற்கு குழி தோண்டினால், வீடுகள் பாதிக்கும் என்பதை கடந்தாண்டு டிச., மாதமே அக்குடும்பத்தினர் மாநகராட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மாநகராட்சி தரப்பில் அலட்சியமாக செயல்பட்டதால், இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
வீடுகள் இடிந்த பகுதிகளை, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் நேற்று பார்வையிட்டார். அவர் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, மாற்று வீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி கவனத்துக்கு கொண்டு சென்று, இலவசமாக வீடு ஒதுக்கீடு செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

