ADDED : ஜூலை 27, 2026 04:04 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடந்த துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாமில், எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், துாய்மை பணியாளர்களுக்கு, அரசின் சலுகைகள் பெற, துாய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கும் பதிவு, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து காப்பீடு, குடும்ப அட்டை, மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சேவைகளை பெறும் வகையில், முகாமில் இடம் பெற்றன.
நகராட்சி கமிஷனர் அமுதா தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிரந்தர துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த், நலவாரிய அட்டை வழங்கி பேசினார்.
