/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
/
துாய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு
ADDED : செப் 18, 2024 08:59 PM

மேட்டுப்பாளையம் : காரமடை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில், ஒப்பந்த அடிப்படையில் 80க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு தினமும் கூலி என்ற அடிப்படையில் ரூ. 570 மாதாந்திர சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உரிய தேதியில் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, காரமடை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த பணியாளர்களின் போராட்டம் காரணமாக நகராட்சி பகுதிகளில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது. இதனிடையே,போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், காரமடை தி.மு.க., நகர செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து தூய்மைப் பணியாளர்களை சமாதானம் செய்தார். அப்போது, அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசுகையில், ஏற்கனவே இதே போன்று போராட்டம் நடந்த போது, ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, நீலகிரி எம்.பி., ராசாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது.
இதேபோன்று தற்போதைய உங்களது கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். எனினும் நேற்று யாரும் தூய்மைப் பணியில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறுகையில், தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ., போன்ற விவரங்களை ஒப்பந்ததாரர் தெரியப்படுத்துவது இல்லை.
மேலும் எங்களுக்கான மாத சம்பளத்தை 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி வரை வழங்காமல், காலம் தாழ்த்தி வருகின்றனர். அரசு விடுமுறை நாட்களிலும் சம்பளம் வழங்க வேண்டும் என்றனர்.