/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
/
துாய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : ஆக 13, 2025 08:46 PM

மேட்டுப்பாளையம்; பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காரமடையில் தூய்மை பணியாளர்கள், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 30 பேர் பணியாற்றுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் தூய்மை பணியை ஒப்படைத்தது.
இதன் வாயிலாக, 103 தூய்மை பணியாளர்களை, தனியார் நிறுவனம் வேலைக்கு அமர்த்தி, தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு, போராட்டம் செய்யும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், கூறியதாவது: நகராட்சி தூய்மை பணியாளர்களை போல், நாங்களும் அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளை செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தது போக, தினக்கூலியாக, 442 ரூபாய் தருகின்றனர். ஆனால் மாவட்ட கலெக்டர் தினசரி கூலியாக, 606 ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அந்த தினக்கூலியை எங்களுக்கு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கையுறைகள், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வாரம் ஒரு முறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.
ஆனால் எங்களது கோரிக்கைகளை தீர்க்க நகராட்சி அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இந்த கூலி உயர்வு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.