/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; குப்பை தேக்கத்தால் நாறுகிறது நகரம்
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; குப்பை தேக்கத்தால் நாறுகிறது நகரம்
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; குப்பை தேக்கத்தால் நாறுகிறது நகரம்
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; குப்பை தேக்கத்தால் நாறுகிறது நகரம்
ADDED : மே 05, 2025 11:03 PM

கோவை; ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேக்கம் அதிகரித்து வருகிறது. இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
கோவை மாநகராட்சியில், 2,000க்கும் மேற்பட்ட நிரந்தரம், 4,650 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பை சேகரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, பணி நிரந்தரம் கோரிவந்த ஒப்பந்த பணியாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ.770 தினக்கூலியை வழங்குமாறு, இத்துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 30ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தை முற்றுகையிட்டு துாய்மை பணியாளர் சங்கத்தினர் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மற்றொரு தரப்பினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை, 8:00 மணி முதலே துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நகரம் முழுவதும் குப்பை தேங்கியது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகளுடன், நேற்றிரவு மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பேச்சுவார்த்தையின்போது, வெளி மாநிலத்தவரை வேலைக்கு வைக்க மாட்டோம்; மாத சம்பள ரசீது வழங்கப்படும்; இ.எஸ்.ஐ., பி.எப்., வழங்கவும், துாய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.678 உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக, கமிஷனர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரிடம் பேசி, போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என, முடிவு செய்யப்படும்' என்றனர்.
ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் வரை அடிக்கடி இப்படி போராட்டம் வெடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, துாய்மை பணியாளர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி, உடனடி தீர்வு காண்பது அரசின் கடமை.

