/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு
/
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு
துாய்மை பணியாளர்கள் போராட்டம்; உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு
ADDED : அக் 18, 2024 06:17 AM

கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில், போனஸ் கேட்டு, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை துாண்டியவர்களை உளவுத்துறை போலீசார் கண்காணித்தனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; அவர்களுக்கு கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை கொண்டாட போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தில், 200 துாய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கமாக போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தினருக்கு, தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில், தர்ணா போராட்டத்தை, தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம், துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம், தமிழ் புலிகள் கட்சி துாய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்திருந்தனர். அதனால், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
மாநகராட்சி வளாகத்துக்குள் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க பிரதிநிதிகளிடம், மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரிய துணை தலைவர் கனிமொழி பேச்சு நடத்தினர். ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
போனஸ் தொகையாக, 2,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என கூறப்பட்டது. சட்டப்படி போனஸ் வழங்காவிட்டால் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என கூறி விட்டு, தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறினர்.
போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள், கம்யூ., கட்சியை சேர்ந்த வேறொரு பிரிவினர் என்பதால், உளவுத்துறை போலீசார் மற்றும் 'க்யூ' பிரிவு போலீசார் உள்ளிட்டோர், கண்காணித்து, மத்திய - மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பினர். காலை, 9:00 மணிக்கு வந்த தொழிலாளர்கள் மாலை, 4:00 மணிக்கே கலைந்து சென்றனர்.