/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிவம் சேகரித்த துாய்மை பணியாளர்கள்
/
படிவம் சேகரித்த துாய்மை பணியாளர்கள்
ADDED : நவ 28, 2025 02:59 AM
கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி தொடர்பான அறிவிப்பு வெளியிட்ட நாளில், 32.25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன. அவர்களின் படிவங்கள் அச்சிடப்பட்டு, வீடு வீடாக வினியோகிக்கப்பட்டன. மாநகராட்சி வரி வசூலர்கள், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், சத்துணவு மையத்தினர் படிவங்களை வழங்கினர். ஒரு ஓட்டுச்சாவடியில் 1,300 வாக்காளர்கள் இருந்தால், அனைவரது விபரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வகையில், இதுவரை 30.66 லட்சம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கியதாக பதிவேற்றப்பட்டுள்ளது. இது, 95 சதவீதம். இன்னும் 5 சதவீத வாக்காளர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. வினியோகித்த படிவங்களில், 18.34 லட்சம் பேரிடம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இது, 56.87 சதவீதம். நாட்கள் குறைவாகவே இருப்பதால், வீடு வீடாகச் சென்று திரும்ப பெற ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியாக துாய்மை பணியாளர்கள் சென்று பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்று வருகின்றனர்.
திரும்பப் பெறப்பட்ட படிவங்களை செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுவரை படிவங்களை பெறாதவர்கள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் பட்டியல் ஓட்டுச்சாவடி வாரியாக தயார் செய்யப்பட்டு உள்ளது. அவர்களது பெயர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு முன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகளை அழைத்து, ஒப்புதல் பெற வேண்டும். அதற்குரிய படிவத்தில் கையெழுத்து பெற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, அரசியல் கட்சியினரை தேர்தல் பிரிவினர் வரவழைத்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடை முறையை விளக்கி வரு கின்றனர். இப்பணியை 30ம் தேதிக்குள் முடிக்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

