/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை விவசாயத்தை காப்பாற்றுங்கள்! அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
/
தென்னை விவசாயத்தை காப்பாற்றுங்கள்! அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
தென்னை விவசாயத்தை காப்பாற்றுங்கள்! அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
தென்னை விவசாயத்தை காப்பாற்றுங்கள்! அமைச்சருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : பிப் 12, 2025 11:06 PM
பொள்ளாச்சி; 'தென்னை மரங்களை தொடர்ந்து நோய் தாக்கி வருகிறது. அதில் இருந்து, பாதுகாக்க வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு அமைத்து காப்பாற்ற வேண்டும்,' என, வேளாண்துறை அமைச்சருக்கு, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், வேளாண்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில், மிளகாய், வெங்காயம், காய்கறிகள், சோளம், கம்பு, ராகி போன்றவை, அதிகளவு விவசாயம் நடைபெற்றன.
காலப்போக்கில் மழை பொய்த்தது; தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களினால், பராமரிப்பு செலவு குறைவு, அதிக வருவாய் என்ற அடிப்படையில் விவசாயிகள், தென்னை விவசாயத்தில் ஈடுபட்டனர்.
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல், காண்டாமிருக வண்டு தாக்குதல், கேரளா வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், மஞ்சள் வாடல் நோய், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி, விளைச்சல், 10ல் ஒரு பங்கு தான் உள்ளது.மேலும், தென்னை மரங்கள் வெட்டப்படுகின்றன.
தென்னை மரத்தில் இருந்து ஆண்டுக்கு, 500 கிராம் எடையுள்ள, 100 காய்கள் வரை விளைச்சல் இருக்கும். தற்போது, நோய் தாக்குதல் காரணமாக, 200 கிராம் என்றளவில் தேங்காய் சிறியதாகவும், விளைச்சல், 30 காய்கள் வரை மட்டுமே கிடைக்கிறது. தென்னை விவசாயம் பாதித்த நிலையில் தேங்காய், கொப்பரை விலை உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு பயன் இல்லை.
எனவே, மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி வேளாண் விஞ்ஞானிகள், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும்.
தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து, நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து, விவசாயிகளுக்கு வழங்கி தென்னை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு, கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

