/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொல்வது ரூ . 294; தருவது ரூ. 260 கிராம சபை கூட்டத்தில் சரமாரி புகார்
/
சொல்வது ரூ . 294; தருவது ரூ. 260 கிராம சபை கூட்டத்தில் சரமாரி புகார்
சொல்வது ரூ . 294; தருவது ரூ. 260 கிராம சபை கூட்டத்தில் சரமாரி புகார்
சொல்வது ரூ . 294; தருவது ரூ. 260 கிராம சபை கூட்டத்தில் சரமாரி புகார்
ADDED : பிப் 16, 2024 11:20 PM

அன்னுார்:''நுாறு நாள் வேலை திட்டத்தில் 294 ரூபாய்க்கு பதில் 260 ரூபாய் தான் வழங்கப்படுகிறது,'' என, கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.
நுாறு நாள் வேலை திட்டத்தில், 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2023 மார்ச் 31ம் தேதி வரை நடைபெற்ற பணிகள் குறித்து கடந்த ஒரு வாரமாக சமூக தணிக்கை நடைபெற்றது. நேற்று நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் பொன்னுச்சாமி, துணைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேற்பார்வையாளர் உபைது பற்றாளராக பங்கேற்றார். கூட்டத்தில், ஊராட்சியில் உள்ள ஐந்து கிராமங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகள் என 63 லட்சத்து 50 ஆயிரத்து 702 ரூபாய் செலவாகி உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தணிக்கை ஆட்சேபனைகள் வாசிக்கப்பட்டன.
கூட்டத்தில் தொழிலாளர்கள் பேசுகையில், ''அனைத்து அதிகாரிகளும், உயரதிகாரிகளும், தினசரி சம்பளமாக 294 ரூபாய் வழங்கப்படும் என்கிறார்கள்.
ஆனால் எங்கள் வங்கி கணக்குக்கு, 260 ரூபாய் மட்டுமே வருகிறது. தினமும் 34 ரூபாய் குறைவாக வருகிறது. ஆண்டுக்கு 3,400 ரூபாய் இதனால் இழப்பு ஏற்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வழங்கப்படவில்லை. சம்பளம் கிடைக்காமல் எப்படி நாங்கள் குடும்பம் நடத்துவது. பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை,'' என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
ஒன்றிய அதிகாரிகள் பதிலளிக்கையில், ''அரசு நிர்ணயித்துள்ள அளவில் வேலை செய்தால் மட்டுமே 294 ரூபாய் வழங்கப்படும். அதற்கு குறைவாக பணி செய்தால் அதற்கு ஏற்ப ஊதியம் குறைத்து வழங்கப்படும். அரசிடமிருந்து நிதி வரவில்லை. நிதி வந்தவுடன் நிலுவை சம்பளம் வழங்கப்படும்,'' என அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கூட்டம் முடியும் வரை பெண் தொழிலாளர்கள் தொடர்ந்து நிலுவை சம்பளம் குறித்து புகார் கூறியபடி இருந்தனர்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.