ADDED : மார் 22, 2026 05:08 PM

அன்னுார்: அன்னுார் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் கேன் விலை ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
அன்னுார் பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 6,500 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250க்கும் மேற்பட்ட பொதுக் குழாய் இணைப்புகளும் உள்ளன. அன்னுார், சூலுார், மோப்பிரிபாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், அன்னுார் பேரூராட்சிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர், பவானி ஆற்றில் இருந்து விநியோகிக்க வேண்டும். ஆனால், கடந்த சில நாட்களாக, வெறும் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது.
இதனால், பேரூராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகிக்க முடியாமல் திணறுகிறது. அவிநாசி ரோடு, உப்பு தோட்டம், அ.மு.காலனி உட்பட பகுதிகளில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அலைமோதுகின்றனர். இதை சமாளிக்க, பேரூராட்சி சார்பில், நான்கு நாட்களாக மாலை முதல் நள்ளிரவு வரை, மூன்று தண்ணீர் லாரிகளில் ஆர்.ஓ., குடிநீர் வீதி வீதியாக விநியோகித்து வருகின்றனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று, லாரிகளில் குடிநீர் பிடித்து செல்கின்றனர். பவானி ஆற்று நீர் வரத்து அதிகரித்தால், விரைவில் நிலைமை சீராகும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், 20 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் இதுவரை 30 ரூபாய் முதல் அதிகபட்சம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது குறைந்தபட்சம் 40 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஒரு கேனுக்கு, 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
