/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை வழங்கல்
/
இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை வழங்கல்
ADDED : ஏப் 28, 2025 05:42 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி இ.எஸ்.ஐ., சார்பில், மாதாந்திர நிரந்திர உதவித்தொகை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சக்கரபாக், 23, பணியாற்றி வந்தார். அவர், கடந்தாண்டு ஜூன் மாதம், 3ம் தேதி முதல் இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ் காப்பீட்டாளராக இருந்தார்.
இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதம், 27ம் தேதி பணியில் இருக்கும் போது விபத்து ஏற்பட்டது.இதனால், சக்கரபாக்கிற்கு கோவை இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொ) ரவிக்குமார், உதவி இயக்குனர் பெருமாள் ஆகியோர் ஆணையின்படி, கடந்தாண்டு செப்., 28ம் தேதி முதல் நிரந்தர உதவி பயன் வழங்க ஆணை பிறப்பித்தனர்.
இ.எஸ்.ஐ., பொள்ளாச்சி கிளை மேலாளர் ராஜேஷ்பாபு, சக்கரபாக்கிற்கு உதவி பயன்பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் நிரந்தர ஊன உதவித்தொகையாக, 16,984 ரூபாய் வழங்கினார். அலுவலர் கிருஷ்ணவேணி, தனியார் நிறுவன மனிதவள மேலாளர் மாசிலாமணி ஆகியோர் பங்கேற்றனர்.
இ.எஸ்.ஐ., அதிகாரிகள் கூறுகையில், 'இ.எஸ்.ஐ., சட்டம், 1948ன் படி, 10 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட எந்தவொரு நிறுவனமும், தொழிற்சாலையும் இ.எஸ்.ஐ.,யின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
மாதம், 21 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள், இ.எஸ்.ஐ., சட்டப்படி சமூக பாதுகாப்பு பயன்கள் பெற உரிமை உள்ளவர்களாவர்.மேலும், ஒரு காப்பீட்டாளர் பணியின் போது அல்லது சாலை விபத்தின் போது (பணிக்கு செல்லும் போது அல்லது பணியில் இருந்து திரும்பும் போது) விபத்து ஏற்பட்டால், இ.எஸ்.ஐ., திட்டத்தின் தொழில் சார்ந்த விபத்தாக கருதப்படும்.
காப்பீட்டாளருக்கு ஆயுள் முழுவதுமான, முழுமையான நிரந்தர ஊனம் ஏற்படின் தினசரி ஊதியத்தில், 90 சதவீத விழுக்காடும், பகுதி இயலாமை ஏற்படின் ஊதியத்திறன் இழப்பு அடிப்படையிலும் உதவி பயன் வழங்கப்படும். அந்த அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டது,' என்றனர்.

