பள்ளி மாணவர்கள் கிரிக்கெட்: ராமகிருஷ்ணா பள்ளி சாம்பியன்
பள்ளி மாணவர்கள் கிரிக்கெட்: ராமகிருஷ்ணா பள்ளி சாம்பியன்
ADDED : ஜன 16, 2024 11:31 PM
கோவை;பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணியை வீழ்த்தி, ராமகிருஷ்ணா பள்ளி சாம்பியன் கோப்பையை வென்றது.
ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பில் 27ம் ஆண்டு 'ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான' மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இப்போட்டியில், 16 பள்ளி அணிகள் பங்கேற்று, 'நாக் அவுட்' முறையில் போட்டியிட்டன. இதன் இறுதிப்போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற ராமகிருஷ்ணா பள்ளி அணி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. ஜெயேந்திர சரஸ்வதி அணியின் துவக்க வீரர்கள் நவீன் (51), செந்துார் (51) ஆகியோர் அரைசதம் விளாச, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 147 ரன்கள் எடுத்தது. ராமகிருஷ்ணா பள்ளியின் சூர்யா ராகவன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய ராமகிருஷ்ணா அணி, துவக்க வீரர் பிரசன்னாவின் (83*) அதிரடி ஆட்டத்தால், 18.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராமகிருஷ்ணா அணியின் சாய் சித்தார்த் (36) பொறுப்பாக விளையாடினார்.
