/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தற்காப்பு கலை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்! பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்...
/
தற்காப்பு கலை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்! பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்...
தற்காப்பு கலை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்! பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்...
தற்காப்பு கலை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்! பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்...
ADDED : பிப் 24, 2025 12:33 AM

பெ.நா.பாளையம்; தமிழக அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கான தற்காப்பு கலைத்திட்டத்துக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. இத்திட்டத்துக்கு போதுமான நிதி ஒதுக்கி, தற்காப்பு கலை திட்டத்தை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள், குறிப்பாக, பெண் குழந்தைகளின் மீதான பாலியல் தாக்குதல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக் கொள்ளும் தைரியத்தையும், துணிச்சலையும் பெற வேண்டும். அவர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதால், அந்த தைரியத்தை பெண்கள் பெற முடியும் என்பதால், தமிழக அரசே பெண் குழந்தைகளுக்கான சிறப்பு தற்காப்பு கலை பயிற்சியை, அரசு பள்ளிகளில் வழங்க முடிவு செய்து, அதை செயல்படுத்தி வந்தது.
பெண்கள் மீதான வன்முறையை தடுக்கும் நடவடிக்கையாக இத்திட்டத்துக்கு நிதியை மாநில அரசு ஆண்டுதோறும் ஒதுக்கி வந்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இத்திட்டத்துக்கான நிதியை மாநில அரசு ஒதுக்கீடு செய்யவில்லை.
இதன்படி அரசு பள்ளிகளில், 6 முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் மார்ச் வரை இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு வரை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் அரசு பள்ளியில் சிலம்பம், கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பெண் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்பட்டன. திட்டத்துக்காக பள்ளிகளில் நியமனம் செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம், மாணவிகளுக்கான சிற்றுண்டி செலவுக்காக பள்ளிகளுக்கு தலா ஒன்பதாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிச.,ல் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் வாயிலாக பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். அப்போதுதான் ஜன., முதல் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்ய முடியும். ஆனால், இந்த நிதியை இந்த ஆண்டில் இதுவரை ஒதுக்கவில்லை. இதனால் அனைத்து பள்ளிகளிலும், இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கான தற்காப்பு கலைத்திட்டத்துக்கு ஆதரவு இருந்தது. இதில், பென்சில், பேனாக்களை கொண்டு எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சாதாரண குடை, கைப்பை ஆகியவற்றை கொண்டு எவ்வாறு பாலியல் தொல்லை தரும் நபர்களை எதிர்த்து போராடுவது என்பது குறித்தான வழிவகைகள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்பட்டன.
இதை அரசு பள்ளி மாணவிகள் வெகு ஆர்வமுடன் கற்றனர். ஆனால், திடீரென இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தற்காப்பு கலைத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

