/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நினைவு கூரப்படும் சிறப்பு தபால் முத்திரை
/
நினைவு கூரப்படும் சிறப்பு தபால் முத்திரை
ADDED : பிப் 10, 2025 06:30 AM

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், பட்டீஸ்வரர் முத்திரை பதித்த சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை, இன்றும் நினைவுக் கூரப்படுகிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின், இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. பழமையான இக்கோவிலை சிறப்பிக்கும் வகையில், தபால் துறை சார்பில், பேரூர் பட்டீஸ்வரர் உருவம் பொறித்த சிறப்பு தபால் உறை மற்றும் சிறப்பு தபால் முத்திரை ஆகியவை வெளியிடப்பட்டன. இதற்கான விழா, 1976ம் ஆண்டு பிப்., 3ம் தேதி, பேரூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில், தமிழ்நாடு வட்ட போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜானகிராமன் தலைமையில், மாவட்ட கலெக்டர் லக்ஷ்மிகாந்தன் பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதுகுறித்து, தேசிய விருது பெற்ற, கோவையை சேர்ந்த தபால் துறையின் முன்னாள் அலுவலர் ஹரிஹரன் கூறியதாவது:
கோவையில், பேரூர் பட்டீஸ்வரர் உருவம் பொறித்த முத்திரை பயன்படுத்தப்படுவது சிறப்புக்குரியது. பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, கடந்த முதல் தேதியில் இருந்து 10ம் தேதி (இன்று) வரை, பேரூர் துணை தபால் நிலையத்துக்கு வரும் அனைத்து கடிதங்களிலும், இந்த சிறப்பு முத்திரை பதிக்கப்பட்டு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருங்காலங்களிலும், இங்கு வரும் அனைத்து கடிதங்களிலும், சிறப்பு முத்திரை அச்சிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதன் பெருமை, பரவலாக அறியப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

