/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாத சென்சரி பூங்கா: சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சமாளிப்பதில் சிக்கல்
/
பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாத சென்சரி பூங்கா: சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சமாளிப்பதில் சிக்கல்
பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாத சென்சரி பூங்கா: சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சமாளிப்பதில் சிக்கல்
பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாத சென்சரி பூங்கா: சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை சமாளிப்பதில் சிக்கல்
ADDED : நவ 05, 2025 12:04 AM

கோவை: கோவை அரசு மருத்துவமனையின், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் (டி.இ.ஐ.சி.,) அமைந்துள்ள, சென்சரி பூங்கா பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது.
பொதுவாகவே, அரசு மருத்துவமனையில் அதிக கூட்டம் வரும் என்பதால், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டும்.
டி.இ.ஐ.சி., மையத்துக்கு வரும் குழந்தைகளை சமாளிப்பது, பெற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, ஆட்டிசம், ஏ.டி.எச்.டி., உள்ளிட்ட குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை குறுகிய இடத்தில் வைப்பது இயலாத ஒன்று.
இக்குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட, சென்சரி பூங்கா பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. பயன்பாடு, பராமரிப்பு இன்றி விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜேஸ்வரி என்பவர் கூறுகையில், ''என் மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவன். ஓர் இடத்தில் வைப்பது சிரமம். 12 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. நீண்ட நேரம் சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில், இதுபோன்ற குழந்தையை வைத்துக்கொண்டு மனஉளைச்சலுக்கு ஆளாகின்றோம்.
''பூங்கா பயன்பாட்டுக்கு இருந்தால் பிள்ளைகள் சிறிது நேரம் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் அனுமதிப்பதில்லை,'' என்றார்.
எலியும் பாம்பும் வருகிறது டீன் கீதாஞ்சலி பகீர் டீன் கீதாஞ்சலி கூறுகையில், ''இதுகுறித்து விசாரித்தேன். பார்க் அமைந்துள்ள இடத்தில் எலித்தொல்லை உள்ளதும், ஒரு முறை பாம்பு வந்ததும் தெரிந்தது. உடனடியாக பொதுப்பணித்துறையிடம் கூறி பிரச்னையை சரிசெய்து, பயன்பாட்டுக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.
ஒவ்வொரு ஆண்டும்
சராசரியாக 5,500 பேர்!
டி.இ.ஐ.சி., மையத்தில், 0 முதல் 18 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், பயிற்சி, ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைகளுக்கு உள்ள உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி குறித்த குறைபாடுகளை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கண் பரிசோதனை, பல் மருத்துவம், பிசியோதெரபி, பேச்சு பயிற்சி, உளவியல் உட்பட பல்வேறு சிகிச்சை, பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் மட்டும் 12,000 குழந்தைகள் இம்மையம் வாயிலாக பல்வேறு சிகிச்சைகளை பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் சராசரியாக, 5,500 குழந்தைகள் புதிதாக சிகிச்சைக்கு வருகின்றனர்.

